Friday 3rd of May 2024 08:32:07 PM GMT

LANGUAGE - TAMIL
-
பிரெஞ்சு கத்தோலிக்க மதகுருமார்களால் 200,000 க்கும்  மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் -ஆய்வில் உறுதி!

பிரெஞ்சு கத்தோலிக்க மதகுருமார்களால் 200,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் -ஆய்வில் உறுதி!


பிரெஞ்சு மதகுருமார்களால் கடந்த 70 ஆண்டுகளில் 216,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து அறிந்தும் கத்தோலிக்க திருச்சபை தலைமையகம் நீண்ட காலமாக கண்மூடித்தனமாக இருந்ததாகக் இந்த ஆய்வறிக்கையின் முக்கிய ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து பல ஆண்டுகளாக அலட்சியப் போக்கில் செயற்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதை விட தன்னைப் பாதுகாத்துக் கொள்வதையே கத்தோலிக்க திருச்சபை நோக்கமாகக் கொண்டிருப்பது உறுதியாகிறது என இந்த ஆய்வறிக்கையைத் தொகுத்த விசாரணை ஆணையத்தின் தலைவர் ஜீன்-மார்க் சாவ் கூறினார்.

பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர். அவர்களில் பலர் 10 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவா் தெரிவித்தார்.

இந்த அவலங்களை அறிந்துகொண்டபோதும் இதற்கான எதிர்வினையாற்ற கத்தோலிக்க திருச்சபை முன்வரவில்லை. மாறாக கட்டமைப்பு ரீதியாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவா்களின் உடனடிக் கவனமாக இருந்தது எனவும் அறிக்கை விமர்சித்துள்ளது.

பிரான்ஸில் மதகுருமார்களால் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள் முன்பு கணித்ததை விட பரவலாகவும் மிக அதிகமாக உள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் உலகெங்கும் ரோமன் கத்தோலிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதேவேளை, இந்த அறிக்கையைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட போப் பிரான்சிஸ், தைரியமாக முன்வந்து அநீதிகளை வெளிப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

எமது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன. மிகுந்த துயரத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை நினைத்துப் பார்க்கிறோம் என வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE